‘‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய தந்தையே காரணம்’’ சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாணவர் உதித்சூர்யா பரபரப்பு வாக்குமூலம்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு தனது தந்தையே காரணம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாணவர் உதித்சூர்யா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2019-09-26 23:00 GMT
தேனி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் வந்தது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், க.விலக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 18-ந்தேதி புகார் செய்தார். அதன்பேரில் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடி வந்த நிலையில், உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை சென்றனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்ததுடன், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் சரண் அடைய அறிவுறுத்தியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் 3 பேரும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். க.விலக்கு போலீசார் பதிவு செய்த ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். அப்போது முகத்தை துணியால் மூடியடி அவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு காட்வின்ஜெகதீஸ்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆள்மாறாட்டம் செய்தது எப்படி? அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர் யார்? அவருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? தேர்வுக்கு விண்ணப்பித்து ஹால்டிக்கெட் பெறுவதற்கும், கலந்தாய்வில் பங்கேற்கவும் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என்பது போன்ற சரமாரியான கேள்விகளை உதித்சூர்யாவிடமும், அவருடைய பெற்றோரிடமும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்டனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பிற்பகல் 1.30 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அவரும் உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். மாலை 6 மணி வரை இந்த விசாரணை நீடித்தது.

விசாரணைக்காக தேனி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் உதித்சூர்யா சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

‘‘நான் பிளஸ்-2 முடித்துவிட்டு 2 முறை தொடர்ச்சியாக நீட் தேர்வு எழுதினேன். 2 முறையும் தோல்வி அடைந்தேன். நான் டாக்டராக வேண்டும் என்று எனது தந்தை ஆசைப்பட்டார். அவருடைய ஆசையால், வேறு நபர் மூலம் தேர்வு எழுத புரோக்கரை நாடினார்.அந்த புரோக்கர் யார்? எழுதியது யார்? என்பது எனக்கு தெரியாது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத எனது தந்தையே காரணம்’’, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் வாக்குமூலம் பெற்றனர். இந்த ஆள்மாறாட்டத்தில் உதித்சூர்யாவின் தாயார் கயல்விழிக்கு தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை வழக்கில் போலீசார் சேர்க்காமல் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்