கோவையில், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி - உரிமையாளருக்கு வலைவீச்சு

கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-09-26 22:15 GMT
கோவை,

கோவை சித்தாபுதூர், சின்னசாமி நாயுடு சாலையில் தனவர்ஷா என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் சுரேஷ்குமார். இவர் சீரடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலா, அந்தமான், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொழுதுபோக்கு சுற்றுலா அழைத்துசெல்வதாகவும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சுற்றுலா தலங்களை பார்வையிட குறைந்த செலவில் அழைத்துச்செல்வதாகவும் கூறி பணம் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே பலரை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச்சென்றுள்ளதால், பலர் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்த தொடங்கினர். ஆனால் அவர் பணம் செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து நகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஏராளமானவர்கள் டிராவல்ஸ் நிறுவனம் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுரேஷ்குமார், அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரும், அவருடைய மனைவியும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து நகர மத்திய குற்றப்பிரிவுபோலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மீது இதுவரை 500 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதில் ரூ.6 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மோசடியில் தொடர்புடைய சுரேஷ்குமார் தலைமறைவாகியுள்ளார்.

அவர் வெளிமாநிலங்களில் பதுங்கி உள்ளாரா? அல்லது வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டாரா? என்று தெரியவில்லை. தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து புகார் செய்து வருவதால், இன்னும் பலர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்