பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை - கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கோவையில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2019-09-27 00:00 GMT
கோவை,

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் நடராஜ் (வயது 60) என்பவர் தனது மனைவி சரோஜா(54) மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். மகனும். மருமகளும் பணி காரணமாக அலுவலகத்துக்கு சென்று விடுவார்கள். பகலில் நடராஜ், சரோஜா ஆகியோர் மட்டும் வீட்டில் இருப்பார்கள்.

அவர்களது வீட்டுக்கு அருகில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத்(29) என்பவர் வசித்து வந்தார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வந்தார். சரோஜாவுக்கு வயது முதிர்வு காரணமாக கை நடுக்கம் இருக்கும். இதனால் வீட்டில் யாரும் இல்லாத பகல் நேரங்களில் கியாஸ் சமையல் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்காக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் யாசர் அராபத்தை அழைத்து அடுப்பை பற்ற வைக்க சொல்வது வழக்கம். அவரும் ஒன்றிரண்டு சமயம் உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி மதியம் 12 மணியளவில் சரோஜா கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார். ஆனால் கை நடுக்கம் காரணமாக அவரால் அடுப்பை பற்ற வைக்க முடியவில்லை. உடனே உதவிக்காக பக்கத்தில் குடியிருந்த யாசர் அராபத்தை அழைப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கதவை திறந்ததும் சரோஜாவை கீழே தள்ளி யாசர் அராபத் கத்தியால் குத்தினான். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவர் அணிந்திருந்த 20 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, மோதிரங்கள், கம்மல் ஆகிய நகைகளை திருடிக் கொண்டார். சரோஜாவின் உடலை வெளியே கொண்டு செல்ல முடியாது என்பதால் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு சூட்கேசில் தலை, கை, கால் ஆகியவற்றை போட்டு படுக்கை அறையில் மறைத்து வைத்தார். இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியை வெட்டி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்து சிமெண்டினால் பூசினார். உடலின் மற்ற பாகங்களை வெட்டி மற்றொரு சூட்கேசில் வைத்து வேறொரு அறையில் பதுக்கி வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

சற்று நேரத்தில் நடராஜன்வந்த போது வீடு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே மனைவியை அக்கம்பக்கத்து வீடுகளில் தேடினார். ஆனால் அவர் காணவில்லை. பக்கத்தில் குடியிருந்த யாசர் அராபத் வீடும் பூட்டப்பட்டிருந்தது.

எனவே மனைவி காணாமல் போனது குறித்து நடராஜன் தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட் டது. புகாரை தொடர்ந்து போலீசார் சரோஜாவை காணவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாலையில் யாசர் அராபத் வீடு திரும்பியதும் ஒன்றும் தெரியாதது போல சரோஜாவின் குடும்பத்தினருடன் சேர்ந்து காணாமல் போன அவரை தேடினார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பின்னர் அவரும் வீட்டை விட்டு சென்று வி்ட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை

இந்த நிலையில் சரோஜா காணாமல் போய் 6 நாட்கள் கழித்து யாசர் அராபத் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். யாசர் அராபத் வீட்டில் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரோஜா கொலை செய்யப்பட்டு மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு பார்சலாக கட்டப்பட்டு பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனால் சரோஜாவை யாசர் அராபத் தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். இந்த கொடூர கொலை வழக்கு கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து யாசர் அராபத்தை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் யாசர் அராபத் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் சென்று யாசர் அராபத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் சரோஜாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை), 380(திருடுதல்), 201(தடயத்தை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 33 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட் டன. 31.3.2014 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை 2016-ம் ஆண்டு தொடங்கி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை ஆகியவை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட யாசர் அராபத்துக்கு இந்தியதண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) பிரிவின் கீழ் தூக்கு தண்டனையும், 380-வது பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும். ரூ.10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 201-வது பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கே.பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்புக் கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜரானார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாசர் அராபத்தை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு கோவை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்