சங்ககிரி அருகே, 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - 2 பேர் கைது
சங்ககிரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி,
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா கொங்கணாபுரம் புதுப்பாளையம் ஊராட்சி சின்ன முத்தையாபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 23), கூலித்தொழிலாளி.
இவர் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் அவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுவனையும் போலீசார் இந்த வழக்கில் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் எடப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் வெங்கடேசன், சேலம் மத்திய சிறையிலும், அந்த சிறுவன், ராசிபுரத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.