முக்கூடல் அருகே, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் - சீரான குடிநீர் வழங்க கோரிக்கை
முக்கூடல் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முக்கூடல்,
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது பொட்டல் காலனி. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை முக்கூடல்- நெல்லை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த முக்கூடல் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.