நெல்லை அருகே, பாலிடெக்னிக் மாணவர் கொலையில் மேலும் 2 பேர் கைது - தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண்

நெல்லை அருகே பாலிடெக்னிக் மாணவர் கொலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

Update: 2019-09-25 22:30 GMT
ஸ்ரீவைகுண்டம்,  

நெல்லை அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருடைய மகன் அபிமன்யு என்ற திலீப் (வயது 19). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 23-ந் தேதி மதியம் உணவு இடைவேளையில் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றபோது, அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் வழிமறித்த மர்மநபர்கள் அபிமன்யுவை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தையடியூர் கோவிலில் வரவு செலவு கணக்கு கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அப்பகுதியைச் சேர்ந்த காமராஜிக்கு (32) அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அபிமன்யுவை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக காமராஜ், அவருடைய அண்ணன் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அபிமன்யு கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சந்தையடியூரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் ஆன்ட்ரூஸ் (30), நெல்லை படப்பகுறிச்சியைச் சேர்ந்த வினோத் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த அனிஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அபிமன்யு கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை சிவந்திபட்டியைச் சேர்ந்த ரத்தின பாண்டியன் மகன் மகேஷ் என்ற மாணிக்கம் (27) தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி சுமிதா உத்தரவிட்டார். இதையடுத்து மகேஷை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்