“மாணவர்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்” - அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்

பெலகாவி அருகே, பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் மாணவர்கள் மீது மோதுவது போல் ஓட்டிய அரசு பஸ் டிரைவர், அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-09-25 22:33 GMT
பெங்களூரு,

பெலகாவி மாவட்டம் கானாப்புரா தாலுகா பெகவாடா கிராசில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் நிற்காமல் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அங்கிருந்து பஸ் ஏறும் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. நேற்று முன்தினமும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக மாணவர்கள் காத்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக கர்நாடக அரசின் வடமேற்கு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் வந்தது. அந்த பஸ் உத்தர கன்னடா மாவட்டம் தாண்டேலியில் இருந்து ஹலியால் வழியாக பெலகாவி நோக்கி செல்லும் பஸ் ஆகும். அந்த பஸ்சை மாணவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. மேலும் மாணவர்கள் மீது மோதுவது போல் பஸ்சை ஓட்டினார். இந்த வேளையில் ஒரு மாணவர் பஸ்சின் முன்புறத்தில் நின்று பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த காட்சிகளை சில மாணவர்கள் தங்களுடைய செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

இதுபற்றி தார்வார் மண்டல போக்குவரத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஷேக் என்பவர் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து நேற்று போக்குவரத்து துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்