திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி தமிழக-கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடந்தது.

Update: 2019-09-25 22:30 GMT
சுசீந்திரம்,

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வார்கள். விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

அதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 9.10 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக-கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை நீதிபதி கோமதி நாயகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா, நவராத்திரி குழுத் தலைவர் வீரபத்திரன், ஊர்தலைவர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலம்

அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து ரதவீதிகளில் அம்மன் வீதி உலா வந்தது. ஊர்வலத்தின் முன்பு பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், கையில் திருவிளக்கேற்றியும், சிவாச்சாரியார்கள் பாடல் பாடியும் தமிழக-கேரள போலீசார் இசை வாத்தியங்களை இசைத்தபடியும் சென்றனர். பின்னர் அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று இரவு நீலகண்டசாமி கோவிலை அடைந்தது.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி

இன்று காலை 7.20 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல்மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல்துறை மந்திரி ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம் திருவிதாங்கோடு, அழகியமண்டபம் வழியாக இரவு குழித்துறை மகாதேவர் கோவிலைச் சென்றடைகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) களியக்காவிளை வழியாக சென்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை ஊர்வலம் அடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், நவராத்திரி கொலு அமைப்பினரும், கேரள அறநிலையத்துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்