மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும் - சீத்தாராம் யெச்சூரி சொல்கிறார்

வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-25 23:15 GMT
புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் புதுவையில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வதுநாள் கூட்டத்துக்கு தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தின் ஒரு பகுதியாக ‘மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்களும்’ என்ற தலைப்பில் கம்பன் கலையரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசியதாவது:-

2019 தேர்தலில் மோடி 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் சாசனம் அழிக்கப்பட்டு வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். அரசியல் சாசனம் அழிக்கப்பட்டதற்கு உதாரணம் காஷ்மீர். ஒரு மாநிலம் அழிக்கப்பட்டு விட்டது. இன்னும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அங்கு நீடிக்கிறது. இதுவரை காஷ்மீர் இந்தியாவோடு சேராமல் இருந்ததாகவும் தற்போது இணைந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் காரியத்தை செய்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மோடி கையாண்ட விதம்தான் காரணம்.

ரூ.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உதவியும், நிவாரணமும் பணக்காரர்களுக்கு அரசு தந்துள்ளது. மறுபக்கத்தில் ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத நிலை உள்ளது. வாங்கும் சக்தியை அதிகரித்தால்தான் பொருளாதார மந்தநிலை மாறும். பணக்காரர்களுக்கு கொடுத்ததற்கு பதிலாக நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியை செய்திருக்கலாம். இதனால் வேலைவாய்ப்பு உருவாகி இருக்கும். இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், வெங்கடேசன் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், வாசுகி, பிரதேசக்குழு மூத்த உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்