செந்துறை அருகே ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

செந்துறை அருகே ஏரியில் மூழ்கி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-09-25 23:15 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் ஜெகன் (வயது 14). அதே கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆணைமுத்து (14), மருதமுத்து மகன் அன்பரசன்(13). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். ஜெகன், ஆணைமுத்து ஆகியோர் நமங்குணம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், அன்பரசன் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் நேற்று ஜெகன், ஆணைமுத்து, அன்பரசன் மற்றும் நண்பர்கள் 2 பேர் சொக்கநாதபுரத்தில் உள்ள நொண்டி கருப்பன் ஏரியில் குளிக்க சென்றனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக இருந்தது. ஏரியில் முதலில் அன்பரசன் இறங்கி குளித்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஏரியில் ஆழமான இடத்துக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கியவாறு தத்தளித்துக் கொண்டிருந்தார்.

3 பேரும் சாவு

இதனை கரையில் நின்று கொண்டிருந்த ஜெகன், ஆணைமுத்து ஆகியோர் கண்டு, உடனடியாக அன்பரசனை காப்பாற்றுவதற்காக ஏரிக்குள் குதித்தனர். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட ஏரிக்கரையில் நின்ற சக நண்பர்கள், ஏரியில் மூழ்கிய 3 நண்பர்களையும் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் அருகே ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தவர்களிடமும், கிராமத்துக்கு சென்று உறவினர்கள், பொதுமக்களிடம் நடந்த சம்பவத்தை அழுதவாறு தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து ஏரிக்குள் இறங்கி அன்பரசன், ஜெகன், ஆணைமுத்து ஆகியோரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த மாணவர்களின் பெற்றோரும் அங்கு வந்தனர். பின்னர் ஏரியில் அன்பரசன், ஜெகன், ஆணைமுத்து ஆகியோரை மீட்ட கிராம மக்கள் உடனடியாக சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அன்பரசன், ஜெகன், ஆணைமுத்து ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வீட்டிற்கு ஒரே மகன்கள்

அப்போது அந்த 3 பேரின் உடல்களை, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து அங்கு வந்த செந்துறை போலீசார், அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த அன்பரசன், ஜெகன், ஆணைமுத்து ஆகிய 3 பேரும், அவர்களின் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதும், அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் சொக்கநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கலெக்டர் அறிக்கை

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன. எனவே குழந்தைகள், சிறுவர்கள், பொதுமக்கள், எவரும் நீர்நிலைகளில் குளிக்கவோ, அருகே விளையாடவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம்’ என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்