மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்; ஆசை நிறைவேறியதாக பேட்டி

சிவகாசியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் கள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தனர். விமானத்தில் செல்ல வேண்டும் என்ற தங்களது ஆசை நிறைவேறி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Update: 2019-09-25 22:30 GMT
ஆலந்தூர்,

பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் ஆசை என்ன? என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஆராய்ந்தது.

அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது, அவர்கள் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதே தங்களது ஆசை என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இதற்காக சிவகாசி அரசு பள்ளியை சேர்ந்த அந்த 30 மாணவ, மாணவிகளும் பஸ்சில் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

சென்னையில் ஒருநாள் முழுவதும் பொழுதுபோக்கு மையங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பள்ளி மாணவர்கள் கூறும்போது, “விமானத்தையே பார்க்காத எங்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொழுதுபோக்கு மையத்திற்கும் அழைத்து சென்றது சந்தோஷமாக இருந்தது. விமானத்தில் அழைத்து வந்து எங்களது ஆசையை நிறைவேற்றி உள்ளனர். அவர்களுக்கு நன்றி” என்றனர்.

மேலும் செய்திகள்