விக்கிரவாண்டி அருகே, அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி - 10 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-25 21:45 GMT
விக்கிரவாண்டி,

மயிலம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் ராமு (வயது 49), ஆட்டோ டிரைவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த சிலரை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டார். விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே சென்றபோது, அங்கு சாலை பராமரிப்பு பணி நடந்ததால் ராமு தனது ஆட்டோவை சாலையின் வலது புறத்திற்கு திருப்பினார்.

அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் கார் மோதிய வேகத்தில் ஆட்டோ ராமுவின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பராமரிப்பு பணியில் இருந்த சுங்கவரி மைய ரோந்து பணி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் ராமு, ஆட்டோவில் பயணம் செய்த ரெட்டணையை சேர்ந்த இருசம்மாள்(40), அமுல்(36), அலமேலு(38), அகிலா(35), செல்வி(27), உமா(36), இவரது 3 மாத குழந்தை ஜெனிஷா மற்றும் சுங்கவரி மைய ஊழியர்கள் துரை நாராயணன்(31), ஏழுமலை(30), சரவணன்(36) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இருசம்மாள் உள்ளிட்ட 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்