முதுகுளத்தூர் அருகே கொசுப்புழுக்களை அழிக்கும் மீன்களை வளர்க்க ஆய்வு

முதுகுளத்தூர் அருகே வெந்நீர்வாய்க்கால் கிராமத்தில் உள்ள குளத்தில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்களை வளர்க்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2019-09-25 22:00 GMT
முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மலேரியா காய்ச்சலை பரப்பும் அனாபிளஸ் மற்றும் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. இந்த கொசுக்கள் நல்லதண்ணீரில் முட்டையிட்டு புழுவாக மாறி பின்னர் கொசுவாக உருவெடுக்கிறது. தண்ணீரில் வளரும் கொசுப் புழுக்களை அழிக்க கம்பூசியா என்னும் நன்னீரில் வளரும் மீன்கள் உதவுகிறது. இந்த மீன்கள் வறட்சியான ராமநாத புரம் மாவட்டத்தில் கிடைப்பது அரிதாக உள்ளதால் பரமக்குடி சுகாதாரத்துறை பணியாளர்கள் திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு சென்று கம்பூசியா வகை மீன்களை ஆயிரக்கணக்கில் தகுந்த உபகரணங்கள் மூலம் பிடித்து வந்து ஏர்வாடி, வாலிநோக்கம், சாயல்குடி, முந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் விடுகின்றனர்.

இயற்கைமுறையில் கொசுப்புழு ஒழிப்பு நடைபெறுவதை தீவிரப்படுத்த வருடம் முழுவதும் நல்ல தண்ணீர் இருக்கக் கூடிய முதுகுளத்தூர் அருகே வெந்நீர்வாய்க்கால் கிராமத்தில் உள்ள குளத்தில் கம்பூசியா மீன்களை வளர்ப்பது பற்றி மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனைப்படி சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் உத்தரவின்பேரில் பரமக்குடி சுகாதார மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன் நேரடியாக ஆய்வு செய்தார்.

வெளிமாவட்டங்களில் இருந்து கம்பூசியா மீன்களை கொண்டு வந்து இந்த குளத்தில் விட்டு இனப்பெருக்கம் செய்து பின்னர் இவற்றை ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் விட்டு கொசுக்களின் உற்பத்தியை ஒழிக்க முடியும். இதற்கான ஆய்வுகளை மாவட்ட மலேரியா அலுவலர் கண்ணன் பணியாளர்களுடன் சென்று மேற்கொண்டார். இதேபோன்று ஏர்வாடி, வாலிநோக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீன்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகள், ஊற்றுகள், கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளில் விடப்பட்டு கொசுப்புழுக்களை ஒழிக்கும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்