அலிபாக்கில் ரூ.5 கோடி ஐம்பொன் சிலைகளை கடத்திய 3 பேர் கைது

அலிபாக்கில் ரூ.5 கோடி ஐம்பொன் சிலைகளை கடத்தி கொண்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த விஷ்ணு, மகாலட்சுமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-09-24 23:50 GMT
தானே, 

ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதியில் உள்ள ஓட்டலில் பழங்கால சிலைகளை விற்க கும்பல் வரவுள்ளதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சாய்ராபுல் கோகுல் தாபா என்ற இடத்தில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் 8.7 கிலோ எடையுள்ள ஐம்பொன்னிலான 12 முகம் கொண்ட விஷ்ணு சிலை, 6.8 கிலோ எடையுள்ள மகாலட்சுமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை தொல்பொருள் ஆய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்