சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தில் தீபாவளி போனஸ் கேட்டு தனியார் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

என்.எல்.சி.யில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டு திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-24 22:30 GMT
நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 1-வது வட்டத்தில் 65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 52 பேர் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்குவதாகவும் தனியார் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு 12 மணி நேரம் வழங்கப்படும் வேலையை 8 மணி நேரமாக குறைத்து வழங்க வேண்டும், கடந்த 4 ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்குதல், மேலும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும், அதோடு வருகிற 10-ந்தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்வரை, பணிக்கு திரும்ப போவதில்லை என்று கூறி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அந்த மையத்திற்கு வெளியே அவர்கள் அமர்ந்தனர். இவர்களது இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்