நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய பாலிடெக்னிக் மாணவர் கொலையில் அண்ணன்-தம்பி கைது - மேலும் 5 பேருக்கு வலைவீச்சு

நெல்லை அருகே பரபரப்பை ஏற்படுத்திய பாலிடெக்னிக் மாணவர் கொலையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-24 23:15 GMT
ஸ்ரீவைகுண்டம், 

நெல்லை அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் அபிமன்யு என்ற திலீப் (வயது 19). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவேளையில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது கல்லூரி அருகில் ரெயில்வே கேட் பகுதியில் அவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், அபிமன்யுவை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சந்தையடியூர் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் கொடை விழா நடந்தபோது, வரவு-செலவு கணக்குகளை கேட்டது தொடர்பாக அபிமன்யுவின் தாத்தாவான ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் காளிதாசனுக்கும் (73), அப்பகுதியைச் சேர்ந்த சப்பாணி மகன் தனியார் நிறுவன ஊழியரான ஆனந்தராஜ் என்ற காமராஜிக்கும் (32) இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதில் காமராஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அபிமன்யு உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் அபிமன்யுவை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான காமராஜ், அவருடைய அண்ணன் விவசாயியான குமார் (40), ஆனந்தன் மகன் ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடினர். வெளியூருக்கு தப்பி செல்வதற்காக, பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த காமராஜ், குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் செய்துங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்