கர்நாடகத்தில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி 1-ந் தேதி தொடக்கம்
கர்நாடகத்தில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.
பெங்களூரு,
தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக மேல்-சபையில், கர்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி உறுப்பினராக உள்ள சவுடாரெட்டி தொபள்ளி, கர்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதி உறுப்பினர் எஸ்.வி.சிவக்குமார், கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதி உறுப்பினர் சரணப்பா மத்தூர், பெங்களூரு ஆசிரியர் தொகுதி உறுப்பினர் புட்டண்ணா ஆகியோரின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
கர்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் சித்ரதுர்கா, தாவணகெரே, துமகூரு, கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. கர்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் தார்வார், ஹாவேரி, கதக் மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
கர்நாடக வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில் பீதர், கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், கொப்பல், பல்லாரி மற்றும் தாவணகெரேயில் ஹரப்பனஹள்ளி தாலுகா ஆகிய பகுதிகள் அடங்கும். பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் பெங்களூரு, பெங்களூரு புறநகர் மற்றும் ராமநகர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.
இந்த 4 தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. பெயர் சேர்க்க நவம்பர் மாதம் 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதே மாதம் 23-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க டிசம்பர் மாதம் 9-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அதே மாதம் 26-ந் தேதிக்குள் அனைத்து ஆட்சேபனைகளுக்கும் தீர்வு காணப்படும். வருகிற டிசம்பர் 30-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கர்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதிக்கு பெலகாவி மண்டல கமிஷனரும், கர்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி மற்றும் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதிக்கு பெங்களூரு மண்டல கமிஷனரும், கர்நாடக வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதிக்கு கலபுரகி மண்டல கமிஷனரும் தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
பட்டதாரிகள் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பட்டம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். பட்டம் பெற்றதற்கான சான்றிதழின் நகலை வழங்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்தில் படித்தவராக இருந்தாலும் சரி, பட்டம் பெற்றிருந்தால் பெயர் சேர்க்க தகுதி உண்டு.
ஆசிரியர்கள் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். இதற்கான அனுபவ சான்றிதழை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் பூத் மட்டத்தில் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.