ஆற்காடு டாக்டர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன

ஆற்காட்டில் டாக்டர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. மேலும் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-24 23:00 GMT
ஆற்காடு, 

ஆற்காட்டில் உள்ள சாய்பாபா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 62). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி இளவேணி (55). இவர்களது மகன்கள் ஹேமச்சந்திரன் (33), கீர்த்திராஜன் (30). இருவரும் டாக்டர்கள். தனசேகரன், இளவேணி, ஹேமச்சந்திரன், இவருடைய மனைவி தேன்மொழி, இவர்களது மகன் வைஷ்ணவராஜ் (5) ஆகியோர் வீட்டின் முதல் மாடியிலும், கீர்த்திராஜன், அவருடைய மனைவி டாக்டர் பவித்ரா ஆகியோர் தரைதளத்திலும் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம்போல தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் கீர்த்திராஜன் வசித்து வரும் தரைதள வீட்டில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்களது அறைகளில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர்.

அப்போது தரைதளத்தில் இருந்த 5 கதவுகள், முன்பக்க மற்றும் பின்பக்க கிரில் கேட்டுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தன. மேலும் டி.வி. மற்றும் ஷோபா ஆகியவை எரிந்து கொண்டிருந்தன. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். வீட்டின் சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதேபோல் அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் ரகுபதி (59) என்பவரின் வீட்டின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டிருந்தது. மேலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

அதிகாலை நேரத்தில் வெடிசத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் வீட்டின் முன்பு திரண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு ஏதும் வெடித்திருக்குமோ என சந்தேகம் எழுந்ததால் வேலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். ஆனால் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயம் ஏதும் கிடைக்கவில்லை.

இதுபற்றி அறிந்ததும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குளியல் அறையில் பயன்படுத்தப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் வெடிசத்தம் கேட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்