சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு

சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.

Update: 2019-09-24 23:30 GMT
புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டம் நேற்று தொடங்கியது.

கூட்டத்துக்கு தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., வாசுகி, சம்பத், சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுவை காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு முடிவு செய்கிறது.

மத்தியில் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு அரசியல் சட்ட விதிகளின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், மனித உரிமைகள் என அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பினாமி போலவே தமிழக அ.தி.மு.க. அரசு மாறிவிட்டது. மோடி அரசு கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் எந்தவித எதிர்ப்புமின்றி உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றன.

இந்த பின்னணியில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் மக்கள் விரோத, மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டி உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே இந்த தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்