இளைஞர்கள் போட்டிகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் கலெக்டர் பேச்சு

இளைஞர்கள் போட்டிகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

Update: 2019-09-24 23:00 GMT
பெரம்பலூர்,

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2019-2020-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இரு பாலருக்கும் தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுக்களுக்கான களம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் ஊரகப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியிலிருந்தும் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாடுபட வேண்டும்

இதன்மூலம் இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும், இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்க்கவும், கிராமங்களில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க உடற்பயிற்சி ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்