குன்னூர் தனியார் பள்ளியில் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியை சஸ்பெண்டு
குன்னூர் தனியார் பள்ளியில் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டார்.;
குன்னூர்,
குன்னூரில் உள்ள ரெய்லி காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் சாதிக். இவரது மகன் சாகின்(வயது 5). இவன் பெட்போர்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அதே பள்ளியில் வெண்டி என்ற ஆசிரியை பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவன் சாகினை, ஆசிரியை வெண்டி கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் சாகினின் காதில் இருந்து ரத்தம் வடிந்தது. இதுகுறித்து வீட்டுக்கு சென்றவுடன் தனது பெற்றோரிடம் சாகின் கூறினான். உடனே அவர்கள் அவனை குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்பின்னர் சாகினின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாக கமிட்டி விசாரணை நடத்தியது. பின்னர் மாணவனை கன்னத்தில் அறைந்த ஆசிரியை வெண்டியை சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.