முகநூல் மூலம் காதல்: ஆபாச படங்களை வெளியிட போவதாக டென்னிஸ் வீராங்கனைக்கு மிரட்டல் - கல்லூரி மாணவர் கைது

முகநூல் மூலம் ஏற்பட்ட காதலில் நெருக்கமாக பழகி பின்னர் ஆபாச படங்களை வெளியிட போவதாக டென்னிஸ் வீராங்கனைக்கு மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-24 23:00 GMT
சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவை சேர்ந்தவர் நவீத் அகமது. இவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கும், ராயபுரத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஒருவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலில் முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், டென்னிஸ் வீராங்கனை அமெரிக்கா சென்றுள்ளார். அவரை செல்போனில் தொடர்புகொண்ட நவீத் அகமது, ‘நாம் நெருக்கமாக பழகிய ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட போகிறேன்’ என்றும், பணம் கேட்டும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய டென்னிஸ் வீராங்கனை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நவீத் அகமது மீது புகார் கொடுத்தார்.

அதன்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 10 சட்டப்பிரிவுகளின்கீழ் நவீத் அகமது மீது வழக்குப்பதிவு செய்தார். அதன்பிறகு அகமது தலைமறைவு ஆகிவிட்டார்.

கடந்த 2 மாதங்களாக நவீத் அகமதுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று கீழ்ப்பாக்கத்தில் இருந்த நவீத் அகமதுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்