நவராத்திரி விழாவில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 2 யானைகள் எல்லையில் தடுத்து நிறுத்தம்

குமரியில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகள் ஊர்வலத்துக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 2 யானைகளை, வனத்துறை அதிகாரிகள் எல்லையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-24 23:00 GMT
களியக்காவிளை,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்தநங்கை, தேவாரகட்டு சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ஆகிய சாமி சிலைகள் யானை மீது ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.

இந்த சாமி சிலைகளுக்கு தமிழக, கேரள அதிகாரிகள் மற்றும் போலீசார் பிரமாண்டமான முறையில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி அனுப்பி வைப்பார்கள். இந்த நிகழ்வு இரு மாநில ஒற்றுமையை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

சாமி சிலைகள் ஊர்வலம்

இந்த ஆண்டு நவராத்திரி சாமி சிலைகள் ஊர்வலம் நாளை (வியாழக்கிழமை) பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தொடங்குகிறது. முன்னதாக இன்று (புதன்கிழமை) சுசீந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கேரள தேவசம் போர்டுக்கு சொந்தமான 2 யானைகளை நேற்று குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

பக்தர்கள் போராட்டம்

கேரள- குமரி எல்லை பகுதியான பாறசாலையில் வந்த போது, கேரள வனத்துறை அதிகாரிகள், தமிழகத்துக்கு கொண்டு செல்ல போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி யானைகளை தடுத்து நிறுத்தினர். அந்த யானைகள் பாறசாலையில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று மாலை நெய்யாற்றின்கரையில் உள்ள தேவசம்போர்டு அலுவலம் முன்பு திரண்டனர். அவர்கள் நவராத்திரி விழாவுக்கு யானைகளை அழைத்து செல்வது தொடர்பாக வனத்துறையினரிடம் முறையாக அனுமதி பெறாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால்தான் யானைகளை விழாவுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்று கூறி தேவசம் போர்டு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை நடத்தினர்.

பரபரப்பு

போராட்டம் நடத்தியவர்களிடம் தேவசம் போர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குமரியில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு யானைகளை அழைத்து செல்வது தொடர்பான வனத்துறை அனுமதி பெறும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே விரைவில் பிரச்சினை முடிவுக்கு வரும் என்றும், யானைகளை விழாவுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று நவராத்திரி விழா ஊர்வலம் தொடங்கும் நிலையில் பக்தர்களின் இந்த போராட்டம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்