வைகை ஆற்றில் மணல் திருட்டு; லாரிகள் சிறைபிடிப்பு

தெ.புதுக்கோட்டை கிராமத்தில் வைகை ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதால், கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-09-24 22:30 GMT
சிவகங்கை,

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுர மாவட்டம் சூடியூர் ஆகிய இரு கிராம எல்லைக்குட்பட்ட வைகை ஆற்றில் அதிகாலையில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறி தெ.புதுக்கோட்டை கிராமமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகை ஆற்றில் மணல் திருட்டு குறைந்து வந்த நிலையில் எல்லையோர கிராமங்களில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை பிரச்சினை காரணமாக சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கண்டு கொள்ளாததால் அதிகாலையில் மணல் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் கனரக லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே இடத்தில் பொதுப்பணித்துறை சார்பாக அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு, மணல் குவாரியை ரத்து செய்து விட்டது. ஆனால் அதே இடத்தில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தெரிந்த தெ.புதுக்கோட்டை கிராமமக்கள் நேற்று அதிகாலை அங்கு சென்றனர். அப்போது 4 கனரக லாரிகளில் மணல் அள்ள முயன்றதை பார்த்த கிராம மக்கள் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த பார்த்திபனூர், மானாமதுரை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகளை பார்த்திபனுார் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மணல் திருட்டால் நிலத்தடி நீர் வெகு பாதாளத்திற்கு போய்விட்டது. விவசாயமே செய்ய முடியவில்லை. தற்போது மீண்டும் மணல் திருட்டு தொடங்கியுள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்றனர். மேலும் பார்த்திபனூர் போலீசார் மணல் லாரிகள் மீது சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை, மேலும் மணல் லாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் செய்திகள்