விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2019-09-24 22:45 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே உள்ள பிடாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய ராமன், விவசாயி. இவருடைய மனைவி சியாமளா. இவர்களது மகன் ராகவன் (வயது 5), மகள் யாஷினி(4) இவர்களில் யாஷினி விக்கிரவாண்டி அருகே சித்தணி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் சிறுமி யாஷினி, வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது, ‘மீட்டர் பெட்டியில்’ இருந்து கீழே வரும் ‘எர்த்’ கம்பியை கையால் பிடித்துள்ளாள். அப்போது எர்த் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்ததால், அவள் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் மயங்கி கீழே விழுந்த யாஷினியை அவளது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யாஷினி இறந்து விட்டாள். சிறுமியின் உடலை கட்டிப்பிடித்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்