ஈரோட்டில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை; ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

ஈரோட்டில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை அளவு 62 மி.மீட்டராக பதிவானது.

Update: 2019-09-24 22:30 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வழக்கமாக மழை மறைவு பிரதேசமாக இருக்கும் ஈரோட்டில் இந்த பருவக்காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 17–ந்தேதி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது. நீண்ட காலத்துக்கு பின்னர் அன்று மழை அளவு 36 மி.மீட்டராக பதிவானது.

அதைத்தொடர்ந்து லேசான மழைத்தூறல் இருந்து வந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் கூடினாலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஈரோட்டில் பல பகுதிகளிலும் விட்டு விட்டு மழைத்தூறல் இருந்தது. இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணிக்கு தூறலுடன் மழை தொடங்கியது. விட்டு விட்டு பெய்த மழை நள்ளிரவில் பெரும் மழையாக மாறியது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை கொட்டியது.

இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் குளம்போல தேங்கியது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை வரை தூறலாக மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவில் கொட்டிய மழை 62 மி.மீட்டராக பதிவாகி இருந்தது.

நேற்று காலையில் ஈரோட்டில் பல பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் 2 கரைகளையும் தொட்டு தண்ணீர் ஓடியது. பெரும்பள்ளம் ஓடையில் வளர்ந்து நிற்கும் செடி கொடிகளையும் மறைத்துக்கொண்டு தண்ணீர் ஓடியது.

ஈரோடு– சென்னிமலை ரோடு கே.கே.நகர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் மடை திறந்த வெள்ளம்போல தண்ணீர் ஓடியது. முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்தது. சாலையை கடந்து செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்களை ஓட்ட முடியாமல் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் காலை நேரத்தில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்றன. பள்ளிக்கூட வேன்கள், பஸ்கள் தாமதமாகவே சென்றன.

பெரும்பள்ளம் ஓடையில் பொங்கி ஓடிய வெள்ளத்தில் சூரம்பட்டி வலசு அணைக்கட்டில் வெள்ளம் நிறைந்தது. தண்ணீர் ஓடையில் வேகமாக இழுத்துச்சென்றதால் அணைக்கட்டில் தேங்கி நின்ற ஆகாயத்தாமரைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் அணை நேற்று சுத்தமாக காணப்பட்டது. மழை நீர் அணையில் இருந்து அருவியாக கொட்டியது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆனந்தமாக குளியல் போட்டனர்.

மணிக்கூண்டு, பிரப்ரோடு பகுதிகளில் சாலையில் வெள்ளம் ஓடியது. பல இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தண்ணீர் சாலையில் ஓடியது. இரவு நேரம் என்பதால் இதனால் பெரிய பாதிப்பு இல்லை.

பாலித்தீன் குப்பைகள், பாட்டில்கள் அடைப்பால் சாக்கடைகளில் நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டது. எனவே ஈரோட்டில் சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட மைதானத்தில் மழை நீர் குட்டை போல தேங்கியது. மாநகர் பகுதியில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு இருப்பதால் போக்குவரத்து கடுமையான நெரிசலாக இருந்தது. சமீபத்தில் சாலையில் குழி தோண்டப்பட்டு மண் போடப்பட்ட இடங்களில் வாகனங்களின் சக்கரங்கள் புதைந்ததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குண்டும் குழியுமான ரோட்டில், சேறும் கலந்து இருந்ததால் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

மழை காரணமாக ஈரோட்டில் நேற்று வெப்பம் குறைந்து இருந்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.

இந்த மழை, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் நிலத்தடி நீர் மட்டம் உயர மழை உதவும் என்று அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுபோல் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தால் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்