சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
நெல்லை,
நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை போடுவதற்கு, கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று மானூர் அருகே உள்ள குப்பனாபுரம் கிராம மக்கள் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடை, ஊர்கிணறு, குடிநீர் தொட்டி ஆகியவற்றை சரி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக பெட்டியில் மனுவை போட்டு சென்றனர்.
முக்கூடல் அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்தவர்கள் சிலர் வந்து, தாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவையும் பெட்டியில் போட்டு சென்றனர்.
நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் ஆட்டோ நிறுத்துகின்ற இடத்தில் ஆவின் பாலகம் அமைக்கக்கூடாது என்று கூறி மனுவை பெட்டியில் போட்டு சென்றனர்.
தமிழ் புலிகள் கட்சி, கரும்புலிகள் குயிலி பேரவையினர் மாவட்ட செயலாளர் மாடத்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தச்சநல்லூர் உலகம்மன் கோவில் அருகே மதுரை- நெல்லை நெடுஞ்சாலையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும். அங்குள்ள கழிவு நீர் ஓடையை சரி செய்யவேண்டும். உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்யவேண்டும் என்று கூறி மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவையும் பெட்டியில் போட்டு சென்றனர்.