தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க அறிவுறுத்தியது.
அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் சேர்ந்த 150 மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வதற்காக மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) பாவலன் தலைமையில், கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, உடற்கூறியல் துறை தலைவர் ஜெயராணி, உடல் இயக்கவியல் துறை தலைவர் அனிதா, உயிர் வேதியியல் துறை தலைவர் சண்முகபிரியா, நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை கல்லூரி கூட்ட அரங்கில் பரிசோதனை செய்தனர். அப்போது, நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படம், மருத்துவக்கல்வி இயக்குனரகம் அளித்த இடம் ஒதுக்கீடுக்கான சான்றிதழில் உள்ள புகைப்படம், கல்லூயில் மாணவர் சேர்க்கையின்போது அளிக்கப்பட்ட புகைப்படம், சம்பந்தப்பட்ட துறையில் அளிக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை மாணவருடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி டீன் பாவலன் கூறும்போது, “தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் 129 பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 21 பேரும் சேர்ந்து உள்ளனர். இதில் 69 மாணவர்களும், 81 மாணவிகளும் உள்ளனர். இவர்களின் புகைப்பட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை. இந்த அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படும்“ என்றார்.