குறைதீர்வுநாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட திருநங்கைகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் திருநங்கைகள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-23 23:00 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக அவர், மாற்றுத்திறனாளிகளிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருநங்கைகள் தர்ணா

செதுவாலையை சேர்ந்த 10 திருநங்கைகள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனுகொடுத்தனர். பின்னர் குறை தீர்வுநாள் கூட்டம் நடத்த அரங்கிற்கு வெளியே வந்த அவர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதேபோன்று தங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் வேலப்பாடி வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடம் கொசப்பேட்டையில் உள்ளது. இங்கு, 100 குடும்பத்தினர் வீடுகட்டி சுமார் 70 வருடங்களாக வசித்து வருகிறோம். இதற்காக தரை வாடகை செலுத்தி வருகிறோம். அனைவரும் பீடித்தொழில், கூலிவேலை செய்துவருகிறோம். எனவே அந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கூறினர்.

நெற்பயிருடன் வந்த விவசாயி

ஆற்காடு அருகே உள்ள சின்னதக்கை கிராமத்தை சேர்ந்த விவசாயி கங்காதரன் (வயது 50) என்பவர் நெற்பயிருடன் மனு கொடுக்க வந்திருந்தார். அவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு திடீரென்று கோஷம் எழுப்பினார். அப்போது அவருடைய நிலத்துக்கு செல்ல வழிவிடாமல் அதேப்பகுதியை சேர்ந்த 2 பேர் தகராறு செய்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டார்.

உடனே அங்கிருந்த போலீசார் அவரை குறைதீர்வுநாள் கூட்டம் நடந்த அரங்கில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அவர் கோஷமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

நடை பயணமாக...

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 20-ந் தேதி பொம்மிகுப்பத்தில் இருந்து நடைபயணம் தொடங்கினர். நடைபயணத்தின் இறுதியாக நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குறைதீர்வுநாள் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுகொடுத்தனர்.

மேலும் செய்திகள்