முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 89,864 பயனாளிகளுக்கு சிகிச்சை கலெக்டர் தகவல்

முதல்-அமைச்சரின் மருத்துவகாப்பீடு திட்டத்தின்கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 89,864 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.

Update: 2019-09-23 23:00 GMT
தர்மபுரி,

பாரத பிரதமரின் பிரதான்மந்திரி ஜன்ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகிய 2 திட்டங்கள் இணைந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமை கலெக்டர் மலர்விழி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 7 மருத்துவ குழுக்கள் பங்கேற்று சிகிச்சை வழங்குகின்றன. பட்டுகோணம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த அனுப்பிரியா என்ற 3 வயது சிறுமியின் காது பாதிக்கப்பட்டிருப்பதால் காது எலும்பு அறுவை சிகிச்சைக்கு உதவி கோரி என்னை அணுகினார்கள். இந்த சிறுமிக்கு உடனடியாக மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டு காது எலும்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவையான மேல்சிகிச்சைகளை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

காப்பீடு தொகை

ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 1027 வகையான நோய்களுக்கான சிகிச்சைகள், 154 தொடர் சிகிச்சைகள், 38 நோய் கண்டறியும் பரிசோதனைகள், இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 8 உயர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 89,864 பயனாளிகளுக்கு ரூ.133.69 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வருகிற 2-ந்தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், அரசு மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசராஜ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பாபு, மருத்துவ காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், டாக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்