2002–ம் ஆண்டு நடந்த மோசடி: 350 பேரிடம் ரூ.1¼ கோடி ஏமாற்றிய பெண் கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்

ஈரோட்டில் கடந்த 2002–ம் ஆண்டு நடந்த மோசடி வழக்கில் 350 பேரிடம் ரூ.1¼ கோடி ஏமாற்றிய பெண் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு ஈரோடு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

Update: 2019-09-23 23:30 GMT
ஈரோடு,

சேலம் பழனியப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48). இவருடைய மனைவி வண்டார்குழலி (45). இவர்கள் கடந்த 2002–ம் ஆண்டு ஈரோடு நேரு வீதியில் கம்ப்யூட்டர் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை திறந்தனர். இவர்களுடன் சேலத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன், ராஜ்குமார், வீரக்குமார், அரசேந்திரன் ஆகியோரும் பங்குதாரராக இருந்தனர். இந்த அலுவலகத்தில் கணினி ஜாப் சீட் வேலைகள் செய்ய ஆர்டர்கள் வழங்குவதாகவும், பல்வேறு பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித்தருவதாகவும் விளம்பரங்கள் செய்தனர். அதை நம்பி பலரும் பணம் கொடுத்தனர்.

இந்த நிலையில் பிரபாகரன் மற்றும் வண்டார்குழலி உள்ளிட்ட 6 பேரும், ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக சம்பத்நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், ஈரோடு மாவட்ட போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வண்டார் குழலியும், பிரபாகரனும் மற்ற 4 பேரும் இணைந்து ஏராளமானவர்களிடம் மோசடியாக பணம் பெற்று ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2007–ம் ஆண்டு இந்த வழக்கு ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் 350 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்து ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

பிரபாகரன் மற்றும் வண்டார்குழலி உள்ளிட்ட 6 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து ஈரோடு 3–ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் ஜாமீனில் சென்ற பிரபாகரனும், வண்டார்குழலியும் தலைமறைவானார்கள். மற்ற 4 பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகி வந்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்ட சவுந்தரபாண்டியனுக்கு கடந்த 2012–ம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைஅளிக்கப்பட்டது. தலைமறைவான பிரபாகரன், வண்டார்குழலி வழக்கு தனியாகவும், ராஜ்குமார், வீரக்குமார், அரசேந்திரன் வழக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பிரபாகரனும், வண்டார்குழலியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்கள் 2 பேருக்கும் 3–ம் எண் மாஜிஸ்திரேட்டு ‘பிடிவாரண்டு’ பிறப்பித்தார்.

 அதன்பேரில் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி தலைமையில் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராதா, கோவை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடி வந்தனர்.

இந்தநிலையில் குற்றம்சாட்டப்பட்ட வண்டார்குழலி கோவையில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 15 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வண்டார்குழலி தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வண்டார்குழலி இருந்தார். எனவே அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பாதிப்பு இல்லாமல், வண்டார்குழலியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். கோவையில் ஏற்கனவே அவர் மீது இருந்த வழக்கு தொடர்பாக அவர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அவரை ஈரோடு சி.பி.சி.ஐ.டி. வழக்கில் ஆஜர்படுத்த போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அதைத்தொடர்ந்து ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று பிடிவாரண்டினை நிறைவேற்றும் வகையில், வண்டார்குழலியை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து ஈரோடு கொண்டு வரப்பட்டார். அவரை ஈரோடு 3–ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சரண்யா முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஈரோடு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஈரோட்டில் இருந்து தலைமறைவான பிரபாகரன், வண்டார்குழலி தம்பதியினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இதுபோன்று மோசடி வேலையில் ஈடுபட்டனர். இவர்கள் பெயரில் மேற்கு வங்காள மாநிலத்தில் வழக்கு பதிவாகி இருக்கிறது. பெங்களூர், சென்னை, ஐதரபாத் என முக்கிய நகரங்களில் எல்லாம் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில் மோசடி செய்த பணத்தின் விவரம் மட்டுமே சேகரிக்கப்பட்டு இருக்கிறது. 2002–ம் ஆண்டிலேயே இங்கு ரூ.1¼ கோடியை சுருட்டிக்கொண்டு ஓடியவர்கள் இந்தியா முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்து இருக்க வாய்ப்பு உள்ளது.

மோசடி பணத்தில் மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். சென்னையில் அவர்கள் குடியிருந்த வீடு மாதம் ரூ.65 ஆயிரம் வாடகையாகும். உயர் ரக ஆடம்பர கார்கள் என்று ஆடம்பரத்தின் உச்சியில் வாழ்ந்தனர். வண்டார்குழலி தனது பெயரை சேனா, கவிதா, நந்தினி, தேன்மொழி என்று இடத்துக்கு தகுந்தபடி மாற்றி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளார். பிரபாகரனும், பிரபாகர், ஜி, சிவா, கரன் என்று தனது பெயர்களை மாற்றி வைத்து மோசடி செய்து இருக்கிறார்.

மோசடி தம்பதியினர் சென்னையில் இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர் என்ற வி‌ஷயத்தை மோப்பம் பிடித்த அவர்கள் அங்கிருந்தும் தலைமறைவானார்கள். இந்தநிலையில்தான் கோவையில் ஒரு உயர்வகுப்பு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. முழுமையாக கண்காணித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வண்டார்குழலியை கைது செய்தனர். ஆனால், பிரபாகரன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோசடி வழக்கில் இருந்து தலைமறைவான வண்டார்குழலியை, 12 ஆண்டுகளுக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். இது ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்