பீகாரில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட ரூ.2½ லட்சம் யானை தந்தம் பறிமுதல் - 2 பேர் கைது

பீகாரில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்பிலான யானை தந்தத்தை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தந்தத்தைகடத்தி கொண்டுவந்த 2 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.

Update: 2019-09-22 23:52 GMT
மும்பை,

மும்பை காட்கோபர் எல்.பி.எஸ். சாலை சர்வோதய ஆஸ்பத்திரி அருகில் 2 பேர் யானை தந்தத்துடன் வருவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது அந்த பையில் யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் சச்சின் மக்தி பஸ்வான் (வயது26), சரோஜ்குமார் (24) என்பது தெரியவந்தது. யானை தந்தத்தை பீகாரில் இருந்து மும்பையை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்வதற்காக கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அந்த யானை தந்தம் 2 கிலோ 141 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் காட்கோபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்