ராமேசுவரம் அருகே, 2 படகுகளில் பிடித்து வந்த கடல் அட்டைகள் பறிமுதல் - 11 பேர் சிக்கினர்

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் 2 படகுகளில் கடல் அட்டைகள் பிடித்து வந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். உயிருடன் இருந்த கடல் அட்டைகள் நீதிபதி முன்பு கடலில் விடப்பட்டன.

Update: 2019-09-22 22:45 GMT
பனைக்குளம், 

ராமேசுவரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து படகில் சென்று வடக்கு கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதுபோல் அந்த பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினரும் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது மண்டபம் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய 2 விசைப்படகுகளை நிறுத்தி கடலோர போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2 படகிலும் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தன.

அதைத் தொடர்ந்து கடல் அட்டைகளை பிடித்து வந்த மண்டபத்தை சேர்ந்த நவாஸ், சீனி, சத்யராஜ், கருப்பசாமி, முனியசாமி, தர்மர், தட்சிணா, நைனா, நாகரத்தினம், ராமு, சிவா ஆகிய 11 பேரை கைது செய்தனர். படகில் உயிருடன் இருந்த 200 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மண்டபம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கிருந்து, கடல் அட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட 11 பேரையும் மண்டபத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடல் அட்டைகள் உயிருடன் இருப்பதை அறிந்த ராமநாதபுரம் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பாம்பன் ரோடு பாலம் வந்தார்.

அங்கு கொண்டு வரப்பட்ட கடல் அட்டைகளை அவர் பார்வையிட்ட பின்பு, அவற்றை கடலில் விடுவதற்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி முன்னிலையிலேயே கடல் அட்டைகள் அனைத்தும் பாம்பன் கடலில் விடப்பட்டது.கடல் அட்டைகளை பிடித்ததும், அதை பதப்படுத்திய பின்பு படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்