நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.;
சாத்தூர்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடக்கு ரதவீதியில் நடந்தது. ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தோல்வி பயத்திலே தி.மு.க. நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு கொடுத்துள்ளது. தி.மு.க. இப்போது ஒரு செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் குரூப் மாதிரி. ஒரு குரூப் கட்சியாகி விட்டது. அப்பா, மகன், மருமகன் என ஒரு குரூப்பாக கட்சியை நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள எம்.பி. தப்பி தவறி வெற்றி பெற்று விட்டார். ஆனால் அவர் ஓட்டு கேட்டு வரவில்லை, வெற்றிபெற்ற பின் நன்றி சொல்லவும் வரவில்லை. 2006-ம் ஆண்டு கருணாநிதி தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று கூறி வெற்றி பெற்றார்.ஆனால் அதை செய்தாரா? இல்லை.
ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. 100 யூனிட் மின்சாரம் தருவோம் என்று கூறினோம், கொடுத்து வருகின்றோம். மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டர் தந்து கொண்டு இருக்கின்றோம். இப்படி அ.தி.மு.க.வின் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அ.தி.மு.க.வில் உழைக்கின்ற தொண்டர்களுக்கு உரிய மரியாதை எப்போதும் உண்டு. நான் சாதாரண விவசாய வீட்டு பிள்ளை. இன்று அமைச்சராக உள்ளேன். அ.தி.மு.க.விற்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் துரோகம் செய்துவிட்டு ஒருவன் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அண்ணாவின் வழியில் வந்த கட்சி அ.தி.மு.க.தான்.
தி.மு.க. ஆட்சியில் அண்ணாவின் வளர்ப்பு மகன் வசதியில்லாமல் தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அண்ணா எழுதிய அனைத்து புத்தகங்களையும் அரசுடைமையாக்கி கோடிக்கணக்கான பணத்தை அவர் மனைவி ராணியம்மாளிடம் கொடுத்து அண்ணா குடும்பத்தை காப்பாற்றினார். எனவே அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அ.தி.மு.க.வுக்கு தான் உண்டு.
தி.மு.க. ஆட்சி செய்யும்போது எதையாவது சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். யாராவது கேள்வி கேட்டால் மத பிரச்சினையை உருவாக்கி அதை மறக்க செய்வார்கள். இல்லை என்றால் தமிழ், தமிழ் என்று கூறி இந்தி திணிப்பு என கூறி மக்களை எப்போதும் பிரச்சினையில் வைத்து ஆட்சி நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், இலக்கிய அணி இணைசெயலாளர் சதாசிவம், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ் பாண்டியன், மணிகண்டன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், மாவட்ட மாணவர்கள் அணி செயலாளர் நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.