வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலியை பிரித்த ஆத்திரத்தில் கொலை நடந்தது அம்பலம்

மதுரையில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலியை பிரித்ததால் ஆத்திரத்தில் கொலை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-09-22 22:30 GMT
மதுரை, 

மதுரை ஆத்திக்குளம் வண்டிப்பாதை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் குருநாதசேதுபதி(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படை மைதானம் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(40). இவர் வடக்குமாசி வீதியில் பழக்கடை நடத்தி வரும் பஞ்சவர்ணம் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், பஞ்சவர்ணத்தின் தங்கை மகேஷ்வரிக்கும், ஜெயக்குமாரின் தம்பி பாலமுருகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் இறந்து விட்டார். இதனைதொடர்ந்து மகேஷ்வரி ஜெயக்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே ஜெயக்குமாரின் உறவினரான கவுதம் என்பவருக்கும் மகேஷ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஜெயக்குமாருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு கவுதமின் நண்பர் குருநாதசேதுபதி உதவி செய்துள்ளார். இதனால் குருநாத சேதுபதிக்கும், ஜெயக்குமார் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜெயக்குமார், அரிவாளால் மகேஷ்வரியை சரமாரியாக வெட்டி உள்ளார். காயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் ஜெயக்குமாரின் ஆத்திரம் குறையாததால் குருநாத சேதுபதியை கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மற்றும் அவரது தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குருநாத சேதுபதி மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த ஜெயக்குமார் காரை வைத்து மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த குருநாதசேதுபதியை, ஜெயக்குமார் மற்றும் பஞ்சவர்ணம், உறவினர்கள் விஜயபாண்டி, விக்னேஷ் உள்ளிட்ட சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கள்ளக்காதலியான மகேஷ்வரியை தன்னிடம் இருந்து பிரித்த ஆத்திரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜெயக்குமார் உள்பட 8 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்