வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிக்கு அதிரடி படையினர் தயார் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிக்கு அதிரடி படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், நேற்று கொடைக் கானலுக்கு சென்றார். பின்னர் அவர், போலீஸ் நிலையம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்களுக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் நிலுவையில் உள்ள வழக்கு களை உடனடியாக முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானல் மலைப்பகுதியில் மன்னவனூர், வட்டக்கானல், கே.சி.பட்டி, பாச்சலூர், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும். பூம்பாறை கிராமத்தில் நிரந்தரமாக போலீஸ் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல 56 இரு சக்கர வாகனங்களில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். தற்போது கூடுதலாக 50 இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் கள்.
கொடைக்கானல் பகுதியில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிகிறார்கள். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள். ஏரிச்சாலையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க தனியார் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் நகர் பகுதியில் பலர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்கின்றனர். இதனை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ளே நுழையும் வாகனங்களை கண்காணிப்பு செய்ய நகராட்சியின் துணையுடன் வாகன எண்களை பதிவு செய்யும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்படும். ஏரிச்சாலையில் அறிவிப்பு செய்வதற்காக ஒலிபெருக்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதை தடுப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் பெருமாள்மலை, ஊத்து போன்ற இடங்களில் மீட்பு பணிக்காக நவீன ஆயுதங்களுடன் அதிரடி படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். அவர்கள் மரங்கள் விழுந்தவுடன் அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர். அத்துடன் எந்த ஒரு நிகழ்வுக்கும் உடனடியாக செல்வதற்கு ஏதுவாக அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார் கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர், போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், காஞ்சனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் உள்பட போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.