வந்தவாசி அருகே, தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

வந்தவாசி அருகே தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,500 பறித்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-22 22:30 GMT
வந்தவாசி, 

வந்தவாசி தாலுகா கல்லாங்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 52). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் தாத்தாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 19-ந் தேதி இரவு கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே செல்லும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரை மறித்து வழி கேட்டனர். இதற்காக முனிகிருஷ்ணன் நின்ற போது 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1,500 ரூபாயை பறித்தனர். அப்போது அவர் கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

அப்போது ஒருவரின் செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. இதுகுறித்து முனிகிருஷ்ணன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது வழிப்பறி செய்த 3 பேரும் செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 வயது மாணவர் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்ற 2 மாணவர்கள் வேலூர் மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்