கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், இன்குபேட்டரில் இருந்த குழந்தை மீது எறும்புகள் ஊர்ந்ததால் தாய் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் இருந்த குழந்தையின் மீது எறும்புகள் ஊர்ந்து சென்றதால் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதனால் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மருத்துவமனை கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
சங்கராபுரம் அருகே கடுவனூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மனைவி அலமேலு (வயது 28). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 18-ந்தேதி வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. 9 மாதத்திலேயே பிறந்ததால் குழந்தைக்கு முச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள், இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அலமேலு இன்கு பேட்டரில் இருந்த தனது குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தையின் மீது எறும்புகள் ஊர்ந்து சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் தெரிவித்தார். இதையடுத்து செவிலியர்கள், குழந்தையின் உடம்பில் ஊர்ந்து சென்ற எறும்புகளை அகற்றினர். இது பற்றி அறிந்த வாசுதேவன் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த செவிலியர்களிடம் தனது குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு அவர்கள், மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் அங்கிருந்த கண்ணாடியை கையால் அடித்து உடைத்தார். இதில் கண்ணாடி உடைந்தது. மேலும் அவரது கையிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வாசுதேவன் மற்றும் அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை சரியாக கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இது குறித்த தகவலின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசு, மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.