விழுப்புரம் அருகே, கோவிலுக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் - பதற்றம்; போலீஸ் குவிப்பு

விழுப்புரம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2019-09-22 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் பம்பை ஆற்றங்கரையில் ஊத்துக்காட்டு ரேணுகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என கூறி கடந்த ஆண்டு தனியாக திருவிழா நடத்த முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதனால் பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியதால் விக்கிரவாண்டி தாசில்தார், இரு சமூகத்தினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோவிலை சொந்தம் கொண்டாடிய சமூகத்தினர் வைகாசி மாதமும், மற்றொரு சமூகத்தினர் ஆடி மாதமும் திருவிழா நடத்திக் கொள்ளலாம். விழா முடிந்ததும் கோவில் சாவியை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதை இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து கோவிலை சொந்தம் கொண்டாடிய சமூகத்தினர் இந்த ஆண்டு வைகாசி மாதமும், மற்றொரு சமூகத்தினர் ஆடி மாதமும் திருவிழாவை நடத்தி முடித்தனர். இந்நிலையில் கோவிலை சொந்தம் கொண்டாடிய சமூகத்தினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாசில்தாரை சந்தித்து, நாங்கள் கோவிலில் பூஜை செய்ய உள்ளோம் என்று கூறி சாவியை வாங்கி சென்றனர். அதன் பிறகு அவர்கள் சாவியை தாசில்தாரிடம் ஒப்படைக்கவில்லை என தெரிகிறது.

இதற்கிடையே மற்றொரு தரப்பினர் பொங்கல் வைப்பதற்காக நேற்று கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் பூட்டப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த கோவிலை சொந்தம் கொண்டாடிய தரப்பினர், இந்த கோவிலை கட்டியது நாங்கள் தான், அதனை நிர்வகிக்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது. அதனால் சாவியை கொடுக்க மாட்டோம் என கூறிவிட்டு சென்றனர்.

இதில் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர், கோவிலுக்கு வேறு ஒரு பூட்டு போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். அதுவரை பூட்டை நாங்கள் எடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்