சத்தியமங்கலத்தில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
சத்தியமங்கலத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் பவானிசாகர் தொகுதி தி.மு.க. இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் ஜானகி ராமசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
என்னுடைய சுற்றுப்பயணத்திலேயே ஈரோடு மாவட்டத்தில்தான் அதிக அளவில் இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். காரணம் இது பெரியார் பிறந்த மண்.
இந்த மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியபோது, உங்கள் மாவட்ட செயலாளர் 15 ஆயிரம் பேரை சேர்ப்போம் என்று உறுதி அளித்துள்ளார். இதுமகிழ்ச்சியாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் போட்டியிடுவது பற்றி கட்சியில் கலந்து பேசி முடிவெடுப்போம்.
வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.