ஈரோடு திண்டலில் சிதிலமடைந்த பூங்கா சீரமைக்கப்படுமா?

ஈரோடு திண்டலில் சிதிலமடைந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update:2019-09-23 03:45 IST
ஈரோடு, 

ஈரோடு திண்டல் சக்திநகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு ரேஷன் கடைக்கு அருகில் பூங்கா உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு மைதானமாகவும் பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.

அங்கு பூப்பந்து விளையாடுவதற்கான தளம், இறகு பந்து, கைப்பந்து விளையாடுவதற்கான 3 தளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால், வெறும் கம்பிகள் மட்டுமே அங்கு காணப்படுகிறது. தரையில் புல், செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் பொதுமக்களும் நாளடைவில் பூங்கா பக்கம் செல்வதையே தவிர்த்துவிட்டனர். இதனால் அந்த இடம் பயன்படாமல் உள்ளது. பூங்காவை சுற்றிலும் வீடுகள் உள்ளன. எனவே பூங்காவை முறையாக சீரமைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் பூங்கா வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதில் சிரமமாக உள்ளது. மேலும், பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவில் இருப்பதால் வயதானவர்கள், பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே பூங்காவை சீரமைத்து நடைபயிற்சி தளம் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடவசதியும் கிடையாது. தற்போதுள்ள பூங்காவில் ஊஞ்சலுக்கான கம்பிகள் மட்டும் உள்ளன. எனவே ஊஞ்சல், சீசா, சறுக்கி விளையாடுதல் போன்ற விளையாட்டு உபகரணங்களை புதிதாக அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்