பெண்ணாடம் பகுதியில், சம்பா நடவு பணியில் விவசாயிகள் மும்முரம்

பெண்ணாடம் பகுதியில் சம்பா நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-09-22 22:30 GMT
பெண்ணாடம், 

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தற்போது பரவலாக பெய்து வருகிறது. அதுபோல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாகவும், வங்கக்கடலில் அவ்வப்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தொடர்ந்து பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கிராமப்புறங்களில் மேலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கும். அதுபோல் வறண்டு கிடந்த ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் வரத்தொடங்கும் என்பதால் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தியும், எதிர்வரும் மழையினால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் விவசாயிகள் சம்பா நெல் நடவு பணியில் ஆர்வ முடன் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம், இறையூர், மாளிகைகோட்டம், அரியராவி, அகரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சம்பா நெல் நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பறித்து நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்