புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது
காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், சுற்றுலாத்துறை இயக்குனருமான முகமது மன்சூரிடம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்
அக்டோபர் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், புதுச்சேரியில் நேற்று முன் தினம் மதியம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களிடம் விருப்ப மனு பெற்று அதன்பின்னரே வேட்பாளரை அறிவிக்க உள்ளன. எனவே இன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
சுயேட்சையாக போட்டியிட விரும்புபவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தை குறிக்கும் வகையில் சாலையில் வெள்ளை கோடுகள் வரையப்பட்டுள்ளன. மேலும் அங்கு சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, ராஜேஷ் கண்ணா, அதிகாரிகள் கிட்டு பலராமன், கருணையா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பறக்கும் படைகள் எவ்வாறு ரோந்து பணி மேற்கொள்வது, செக்டார் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.