தாராபுரத்தில் கிணற்றில் பிணமாக மிதந்த விதைப்பண்ணை உரிமையாளர் - கொலையா? போலீசார் விசாரணை
தாராபுரத்தில் காணாமல் போன விதை ப்பண்ணை உரிமையாயார் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள டி.காளிபாளையம், ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 44). இவர் அலங்கியம் ரோட்டில் ஏரனமேடு பகுதியில் விதைப் பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரோக்கியசாமி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, விதைப்பண்ணைக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்குதேடியும் கிடைக்காததால், அவரது மனைவி சோப்பியா, தாராபுரம் போலீசில், கணவனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் ஆரோக்கியசாமி அவர் அணிந்திருந்த மோதிரம், மற்றும் அவருடைய செல்போன் உள்பட சில பொருட்களை, அலுவலகத்தில் இருந்த ஒரு மேசை மீது வைத்திருந்தது தெரியவந்தது. அதை வைத்து ஆரோக்கியசாமி தனது அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆரோக்கியசாமி விதை பண்ணை வைத்திருந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது போலீசாருக்கு தெரியவந்ததால், போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த கிணற்றில் ஆரோக்கியசாமி குதித்து இருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜாஜெயசிம்மராவ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் 4 மணி நேரம் போராடி அந்த கிணற்றில் ஆரோக்கியசாமியின் உடலை தேடினார்கள். அப்போது கிணற்றில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7மணிக்கு ஆரோக்கியசாமியின் உடல், அதே கிணற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், ஆரோக்கியசாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வழக்கு பதிவு செய்து, ஆரோக்கியசாமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, கிணற்றில் வீசியுள்ளனரா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விதைப்பண்ணை உரிமையாளர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.