வீரபாண்டி அருகே, சாலையோரம் நின்று மதுக்குடிக்கும் மதுப்பிரியர்கள் - அச்சத்துடன் கடந்து செல்லும் பெண்கள்
வீரபாண்டி அருகே சாலையோரம் நின்று மதுக்குடிக்கும் மதுப்பிரியர்களால் பெண்கள் அந்த வழியாக அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
வீரபாண்டி,
வீரபாண்டி அருகே இடுவம்பாளையத்திலிருந்து முருகம்பாளையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கி சாலையோரம் நின்றபடி குடிக்கின்றனர்.
ஒரு கையில் மதுபாட்டில் மற்றொரு கையில் சிகரெட் என சாலையோரம் கூட்டம் கூட்டமாக நின்று தகாத வார்த்தைகளை பேசியபடி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக இடுவம்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.
இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகவும் அச்சத்துடனே அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் நின்று மதுக்குடித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் மதுப்பிரியர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.