சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கிணறு அமைக்கும் பணி: குடிநீர் ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு

சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக குடிநீர் ஏற்றி வந்த லாரியை போராட்டக்குழுவினர் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-22 22:30 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் கிணறு அமைக்கும் பணி 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக ஊரை 
விட்டு வெளியேற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
இதுபற்றி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி வரை உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

இந்தநிலையில் நேற்று காலை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு குடிநீர் ஏற்றி வந்த லாரியை உள்ளே செல்லக்கூடாது 
என கூறி போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட குடிநீர் லாரியை அவர்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்