காலியாக இருக்கும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது

புதுவை சட்டசபையில் காலியாக உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

Update: 2019-09-22 00:00 GMT
புதுடெல்லி,

புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் காமராஜ்நகர் தொகுதி காலியாக உள்ளது.

புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று சபாநாயகராக பதவி வகித்து வந்தார்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு காமராஜ் நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், புதுச்சேரி சட்டசபையில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கூட்டணியின் பலம் 17 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் பலம் 11 ஆகவும் உள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏ.வாக ராமச்சந்திரன் உள்ளார்.

இந்த நிலையில், காலியாக உள்ள காமராஜ் நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

இடைத்தேர்தல் அட்ட வணையையும் அப்போது அவர் வெளியிட்டார்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் 23-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 30-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி (வியாழக்கிழமை). ஓட்டுப்பதிவு அக்டோபர் 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

பதிவான வாக்குகள் 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:-

காமராஜ் நகர் (காங். வெற்றி)

மொத்த வாக்குகள்-33,297

பதிவான வாக்குகள்-25,774

வைத்திலிங்கம் (காங்)- 11,618

கணேசன் (அ.தி.மு.க.)- 6,512

தயாளன் (என்.ஆர்.காங்)-3,642

முனிசாமி (சுயே)-1,241

விஸ்வநாதன் (இந்திய கம்யூ.)-857

ரவிச்சந்திரன் (பா.ஜனதா)-764

சிவக்குமார் (என்.டி.கே.)- 189

சீத்தாராமன் (பா.ம.க.)- 150

கென்னடி குமரன் (ஏ.ஐ.எம்.கே.)-47

சங்கர் (சுயே)-25

முகமது எலியாஸ் (ஐ.ஜே.கே.)-16

கிருஷ்ணமூர்த்தி(சுயே)-14

நோட்டா-694

மேலும் செய்திகள்