சட்டசபை தேர்தல்: 100 தொகுதிகளில் நவநிர்மாண் சேனா போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் நவநிர்மாண் சேனா கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் ராஜ் தாக்கரே நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மராட்டிய சட்டசபை தேர்தலிலும் நவநிர்மாண் சேனா போட்டியிடாது என தகவல்கள் பரவி வந்தன.
இந்தநிலையில் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நவநிர்மாண் சேனா கட்சி 80 முதல் 100 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாக்கு வங்கி உள்ள இடங்கள்
மும்பையில் நேற்று முன்தினம் நவநிர்மாண் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் கட்சியின் மூத்த தலைவர் பாலா நந்கோன்கர் கூறுகையில், ‘‘கூட்டத்தில் நடந்தது குறித்து ராஜ் தாக்கரேவிடம் கூறுவோம். அவர் தான் இறுதி முடிவு எடுப்பார். எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதும் குறித்தும் அவர் தான் முடிவு செய்வார்’’ என்றார்.
நவநிர்மாண் சேனா மும்பை, தானே, கல்யாண், டோம்பிவிலி, நாசிக், புனே போன்ற அதிக வாக்கு வங்கி உள்ள இடங்களில் போட்டியிடும் என தகவல்கள் கூறுகின்றன.