ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது

ஹெல்மெட் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வழக்கில் மோட்டார்சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2019-09-21 23:15 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவருடைய மனைவி பிரியா(வயது 23). இவர், நேற்று முன்தினம் மாலை தனது தாயார் பிறந்த நாளையொட்டி கேக் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் அடுத்த கே.கே.நகரில் போலீஸ் உதவி மையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அங்கு ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியாவை தடுத்தனர். இதில் பிரேக் பிடித்து நிறுத்திய பிரியா மீது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது கால்களில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது இதில் படுகாயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன், விபத்துக்கு காரணமான லாரியின் கண்ணாடியை கல்வீசி நொறுக்கினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதுபற்றி சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து கலவரத்தின்போது மோட்டார்சைக்கிளை எரித்ததாக அன்பு(23), சரவணன்(24), வின்சென்ட்(26), சுரேஷ்குமார்(24), கார்த்திக்(26), தீனதயாளன்(28), வேலாயுதம்(29) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்