பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்
பட்டிவீரன்பட்டி பகுதியில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.
பட்டிவீரன்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதிகளான அய்யம்பாளையம், மருதாநதி அணை அருகேயுள்ள உள்கோம்பை, வெளி கோம்பை, நெல்லூர், சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து பல ஊர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர தென்னை ஓலைகள், தேங்காய் உரித்த மட்டைகள் ஆகியவற்றில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் கணிசமான வருவாயும், வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
இதனால் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தென்னை விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் பெரிய அளவில் இல்லை. மேலும் பல பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி வருகின்றன. இதனால் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை மரங்களுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் விட்டு வர வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திற்கு மாறிவிட்டனர். இந்த சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கூட கிடைக்காத காரணத்தினால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன.
மரங்கள் வெயிலில் கருகி விட்டால் விலைக்கு யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் கிடைக்கும் குறைவான விலைக்கு மரங்களை விற்று வருகிறோம். தென்னை மரங்களை வேரோடு எடுக்க அதிக செலவாகும். இதனால் மாற்று விவசாயத்திற்கும் இந்த நிலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
வெட்டப்படும் தென்னை மரங்கள் மின்சாரம் தயாரிக் கும் நிறுவனத்துக்கும், கட்டுமான நிறுவனங்களில் பலகைகளாகவும், செங்கல் உற்பத்தி செய்யும் இடங்களுக்கும் விற்கப்படுகின்றன. பல ஆண்டுகள் பலன் தந்த மரங்கள் வெட்டி அழிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.